Thursday, January 3, 2008

நேர்முகப்பரீட்சைக்கு வரவும்

(கடந்த பல ஆண்டுகளாக நேர்முகப்பரீட்சைகளின் போது பெற்ற அனுபவங்களால் உருவான ஆக்கம் இது.)

புதிய நியமனங்கள் வழங்குவதற்கு முன் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்காக அல்லது பதவியுயர்வுகள் வழங்கத்தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்காக நேர்முகப்பரீட்சை நடைபெறுவதுண்டு. ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உள்ளவாறு அல்லது சேவைப்பிரமாணத்தில் தெரிவிக்கப்;பட்ட வாறு எழுத்துப்பரீட்சை முடிவடைந்ததும் அல்லது எழுத்துப்பரீட்சை முடிவுகள் வெளியானதும் நேர்முகப்பரீட்சை நடைபெறும். முன்பு நேர்முகப் பரீட்சையில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் உயர்பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் அண்மைக்காலமாக சிறிய பதவிகளுக்கான நியமனங்களுக்காகவும்; நேர்முகப்பரீட்சைகள் நடைபெறுகின்றன.

எத்தனை வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எண்ணிக்கை தீர்மானித்த பின் அது போல மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர். சில நியமனங்களுக்காக அல்லது சில பதவியுயர்வுகளுக்காக நடைபெறும் நேர்முகப்பரீட்சைகளின் போது புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. பரீட்சார்த்திகளின் வயது வதிவிடம் கல்வித்தகைமை இதர தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் மட்டும் பரிசீலிக்கப்படு;ம். பொதுவாக பதவியை விரும்பும் விண்ணப்பதாரிகளின் உளச்சார்பு அறிவு ஆற்றல் ஆளுமை-விசேட திறமைகள் அனுபவம் பலம் பலவீனம் ஆகியவற்றை சில நிமிடங்களுக்குள் மதிப்பிடும் நோக்கோடு நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பதவிக்கான அடிப்படைத்தகைமைகள் இருந்;து விண்ணப்பித்ததும் நேர்முகப்பரீட்சைக்கு வரச்சொல்லி அழைப்புக்கடிதம் வரும் - நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நேர்முகப்பரீட்சைக்கான ஆயத்தங்களைச் செய்வது அவசியம். நேர்முகப்பரீட்சைக்கு வரவும் என வரும் கடிதங்களில் சமர்ப்பிக்க வேண்டிய சாதனங்களின் பட்டியல் தரப்படும். எனினும் பின்வருபவற்றை முதலில் தயாராக வைத்திருந்தால் கடைசிநேர நெருக்கடியைத்தவிர்த்துக்கொள்ளலாம்.
• பிறப்புச்சான்றிதழ் -உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நல்லது
• தேசிய அடையாள அட்டை- பழையதாக இருந்தால் அல்லது சேத
மடைந்திருந்தால் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
• திருமணத்தின் பின் அல்லது பெயர் மாற்றம் செய்திருப்பின் அதற் கான ஆதாரங்கள் சத்தியக்கடதாசி தயாராக வைத்திருத்தல் -எல்லா சாதனங்களிலும் பெயரும் பிறந்த திகதியும் ஒரேமாதிரி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
• ஏற்கெனவே வேலை செய்பவர்கள் தொழில்கொள்வோர் வழங்கிய அடையாள அட்டையையும் வைத்திருப்பது பயனுள்ளது.
• க.பொ.த.(சா.த)-க.பொ.த.(உ.த) சான்றிதழ் -சில பதவிகளுக்கு ஆங்கிலமொழித்தகைமை இச்சான்றிதழ்களிலிருந்து மதிப்பிடப் படும். சகல சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும் உறுதிப்படுத்தப் பட்ட போட்டோ பிரதிகளையும் கொண்டு செல்ல வேண்டும். குறிப் பாக சான்றிதழின் முன் பக்கத்தி;ல் பாட எண்ணும் மறுபுறத்தில் பாட விபரமும் இருப்பதால் இரண்டு பக்கங்களையும் போட்டோ பிரதி செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
• கலைமானி விஞ்ஞானமானி போன்ற முதல் பட்டச்சான்றிதழ் - பட்டப்பின் படிப்பு சான்றிதழ் - முதுமானி பட்டச்சான்றிதழ்- கலாநிதி பட்டச்சான்றிதழ் ஆகியன. ஓவ்வொரு சான்றிதழுக்கும் புள்ளிகள் வழங்கும் நேர்முகப்பரீட்சைகளும் உண்டு. பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் சான்றிதழுடன் ( CEREMONIAL CERTIFICATE) ஏனைய விபரமடங்கிய கடிதத் (DETAILED LETTER) தையும் கொண்டு செல்ல வேண்டும்.
• பதவியுயர்வுக்கான நேர்முகப்பரீட்சையானால் முதலாவது நியமனக் கடிதம் - நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்த கடிதம் -தடை தாண்டல் பரீட்சை சித்தியடைந்த கடிதம் அல்லது அப்பரீட்சையிலி ருந்து விலக்களிக்கபட்ட கடிதம்
• வேறு பதவி உயர்வுகளுக்கு ஆதாரமான கடிதங்கள்.
• பயிற்சிகளின் போது பெற்ற சான்றிதழ்கள்
• கிடைத்த பாராட்டுக்கள் - விதந்துரைகள்
• பத்திரிகை – சஞ்சிகைகளுக்கு எழுதிய ஆக்கங்கள் உட்பட வெளியிட்ட நூல்கள்.
• கடந்த கால செயற்பாடுகளை நிரூபிக்கக்கூடிய செய்திகள் படங்கள்.
• போட்டிகளில் பெற்ற சான்றிதழ் பரிசில்கள் விருதுகள்
• ஏற்கெனவே பதவி வகிப்பவர்கள் உயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்குத் தோன்றும் போது சம்பள ஏற்றங்கள் யாவற்றையும் பெற்றுக்கொண்டதற்கான கடிதமும் அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரணை எதுவும் இல்லை என்ற கடிதமும் அவசியம்.
•C.V .என ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப்படும் சுய விபரத் திரட்டு.(இதை மனப்பாடம் செய்தால் உங்களைப்பற்றிய தகவல் களைத் தடுமாற்றமின்றி சமர்ப்பிக்க முடியும்)

மேலே தரப்பட்டவற்றை விட வேறு சாதனங்கள் விபரங்கள் தேவை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றையும் தயார் செய்தல் வேண்டும். சான்றிதழ் கடிதம் முதலியவற்றின் மூலப்பிரதிகளை (ORIGINALS) கண்ணாடிக்கடதாசி கொண்ட கோவை (CLEAR FILE) யில் ஒழுங்காக வைத்திருந்தால் சேதமடையாமல் அழுக்காகமல் அவற்றைக் காண்பிக்கக் கூடியதாக இருக்கும். நேர்முகப்பரீட்சை நிறைவானதும் மூலப்பிரதிகளைக் கவனமாக திருப்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதிகள் நேர்முக பரீட்சைச்சபையால் நியமன அதிகாரிக்கு அனுப்பப்படுவதால் அவை திருப்பப் பெற முடியாது.

ஆரம்பத்திலேயே நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு நம்பிக் கையும் பயிற்சியும் திட்டமிடலும் தேவை. பரீட்சை நடைபெறும் இடம் எங்கே உள்ளது? எப்படி செல்ல வேண்டும்? தூரம் முதலியவற்றை முன்கூட்டியே அறிந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன் பரீட்சை நடைபெறும் இடத்தில் இருப்பதை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்.

அழகாகவும் சுத்தமாகவும் ஆடை அணிந்து செல்வதுடன் தலை ஒழுங்காக வாரிவிடப்பட்டிருக்க வேண்டும். மிதமிஞ்சிய ஒப்பனை வாசனைத்திரவியம் ஆகியவற்றை பரீட்சையாளர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை அவமதிப்பது போல படாரென அறையினுள் நுழைவது – அவர்களது மேசையில் அனுமதியில்லாமல் கைப்பை பெட்டி போன்றவற்றை வைப்பது – கைகளைக் காட்டிக்கதைப்பது – அவசியமற்ற அங்க அசைவுகள் -போகச் சொல்லிய பின்னும் தாமதிப்பது ஆகிய நடவடிக்கைகள் நல்லபிப்பிராயத்தை உருவாக்காது.

இப்போது அநேகமானவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதால் பரீட்சைக்கு செல்ல முன் அதன் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் அசௌ கரியங்களை தவிர்த்துக்கொள்ளலாம். அழைக்கப்பட்ட பின் அறையினுள் செல்லும் போது நீங்களே Good Morning – Good Afternoon சொல்லி நல்ல சூழலை உருவாக்கி இருக்கையில் அனுமதியுடன் அமர்ந்து சந்தர்ப்பத்திற்கேற்ப Thanks – Yes Sir – Sorry Sir சொல்வதுடன் பணிவாகவும் மரியாதை யாகவும் தகவல்களைத் தெரிவிப்பது சிறந்தது.

நேர்முக பரீட்சைச்சபையில் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் இருப்பார்கள். மெல்லிய சிரிப்புடன் அவர்கள் முகம் பார்த்து அளவான தொனியில் தெளிவாக பதிலளிப்பது சிறந்தது. முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டோ அல்லது அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டு குனிந்தவண்ணம் குரலைத் தாழ்த்தியோ உயர்த்தியோ கதைப்பதால் எதையும் சாதித்து விட முடியாது. கவனமாக காது கொடுத்து வினாக்களை விளங்கி திறமைகளை யும் அனுபவத்தையும் வெளிக்காட்டத்தக்க வகையில் விடையளிக்க வேண்டும். கண்ணடிப்பது கையைப்பிசைவது தலையைச்சொறிவது ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளளல் நல்லது.
தவறான பதில் - ஊகிக்கிறன் -பிழையில்லை –சரியில்லை என பட்டும் படாமலும் சொல்வதன் மூலமோ மற்றவர்களைக்குறை கூறுவதன் மூலமோ புள்ளிகள் பெற்று விட முடியாது.

‘நேற்று தான் நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் கிடைத்ததால் சாதனங்கள் கொண்டு வரவில்லை – வரும் வழியில் பஸ் விபத்து – நெருங்கிய உறவினர் காலமாகி விட்டார் -முன்பும் பல தடவை வந்தனான்’ என எடுத்துரைத்து அதிக புள்ளி பெற முடியாது. கேள்விகளுக்குப் பதிலளிக்கலாமே தவிர நீங்கள் பரீட்சை தொடர்பாகவோ வேறு விடயங்கள் தொடர்பாகவோ பரீட்சைச்சபையினரிடம் கேள்வி கேட்டு இக்கட்டான நிலைக்கு ஆளாகக்கூடாது.

பதவியை எதிர்பார்க்கும் நிறுவன ஒழுங்கமைப்பு அட்டவணை Organaization Chart நிறுவனம் தொடர்பான விபரங்கள் -பதவிக்கான பொறுப்புகள் கடமைகள் - அவை தொடர்பாக உங்கள் அறிவு அனுபவம் தொலைநோக்கு மொழியாற்றல் - கணனி அறிவு ஆகியன தொடர்பாக கேள்விகள் எழும் என்ற எண்ணத்துடன் பதிலளிக்க தயாராகச் செல்வது விரும்பத்தக்கது.

சபையிலுள்ளோர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தாலும் கேட்கும் போது உங்கள் பெயர் விபரங்களை கூற வேண்டும். அதாவது அவர்களுக் கும் உங்களுக்கும் முன்னர் அறிமுகம் இல்லாதது போல நேர்முகப்பரீட்சை யில் நடந்து கொள்வது நல்லது. எழுதவேண்டிய தேவையும் எழலாம் என்ற எண்ணத்துடன் பேனாவையும் கொண்டு செல்வது நல்லது.

நேர்முகப்பரீட்சைக்கு செல்ல முன் தெரிந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் களைச் சந்தித்து ஒரு ஒத்திகை போல உங்களை கேள்விகள் கேட்கச் சொல்லி தயாராகினால் அச்சமும் கூச்சமும் அகன்று நிதானமாக பதிலளிக்கும் அனுபவம் பெறலாம்.

ஒரு தடவை பரீட்சைக்கு சென்றவரிடம் வாசிக்கச்சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்த போது – அவர் கண்ணாடி கொண்டு வரவில்லை என்றதும் சபையினர் ‘அடுத்த தடவை கண்ணாடியையும் கொண்டு வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தனர்.

ஆங்கில ஆசிரியர் தேர்வுக்கான நேர்முகத்தில் -சபையினர் சொல்லும் ஆங்கிலச் சொற்களுக்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும் சொல்லி உச்சரிக்க வேண்டும். பரீட்சையாளர் ‘லவ்’ என்றதும் ஒருவர் சிரித்தார். மற்றவர் ஒவ்வொரு எழுத்தாக L – O –V –E சொன்னதும் பரீட்சித்தவர் ‘றோங்’ என்றார். பரீட்சைக்குச் சென்றவர் ஏன் என்று வாதிட்டார். மூன்றாவது பரீட்சார்த்தி L – O –V –E என முதல் சொல்லுக்கு எழுத்து கூட்டியதுடன் இரண்டாம் சொல்லாகிய ‘றோங்’ எனபதற்கு ஆங்கிலத்தில் W –R –O –N –G என ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தார். நேர்முகபரீட்சை சபை யாரைத் தெரிவு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
வீரகேசரி
30-12-2007

2 comments:

Unknown said...

Dear Mr. Uduvai,
I read this article today and I like to say my special thanks to you on this regards. These are the valuable comments you made on how to prepare for an interview. I dont think that this article has been reached many of the needed people in that time when it published in Veerakesari. I already forwarded your address to my friends.
thank you. I wish you to work on it more and more to bring our people up.

Rajaji Rajagopalan said...

Dear Uduvai, I read your blog and felt I suddenly travelled back to the "golden years". Good or bad, legal or illegal our own social and political heritage has its own merit and unparalleled mellowness and taste.

Thanks for sharing your wonderful memories.