Tuesday, January 1, 2008

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் கிணறு - ஒரு அவசரக் குடுக்கை கதை

நாலாம் வகுப்பில் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர் சில நாடுகளைக் குறிப்பிட்டு, அங்கேயுள்ள கிணறுகளிலிருந்து ‘மண்ணெண்ணை’ எடுக்கப்படுகிறது என்று சொல்லியதும், நான் அவசரப்பட்டு “தெரியும் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் செட் சந்தியிலிருக்கும் கிணறுகளிலையிருந்தும் மண்ணெண்ணை எடுக்கினம்” என்று சொல்லியதும் ஆசிரியர் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார். சக மாணவர்கள் என்னைப் பார்த்தனர்.

“ஓம் சேர். பஸ் ஸ்ரான்டிலையிலிருந்து கஸ்தூரியார் றோட்டாலை போற போது, வின்ஸர் தியேட்டர் சந்தியிலை மூண்டு பக்கமும் பெற்றோல் செட் இருக்குது. அந்த பெற்றோல் செட்டிலை மண்ணெண்ணை குடுக்கிறதுக்கு பிறம்பாக ஒரு பைப் வைச்ச டாங் இருக்கு. அதுக்குப் பக்கத்திலை மண்ணெண்ணை கிணறு இருக்குது” என்றேன்.

ஆசிரியர் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அது மண்ணெண்ணை கிணறுகள் இல்லை. தண்ணீர்க் கிணறுகள். இலங்கையில் எண்ணெய்க் கிணறுகள் இல்லை” என்றார்.

அப்பாவுக்கு இந்த சம்பவத்தைச் சொன்னதும், அப்பா கஸ்தூரியார் றோட்டும், ஸ்ரான்லி றோட்டும் சந்திக்கும் வின்ஸர் தியேட்டர் சந்திக்கு என்னை அழைத்துச் சென்றார். மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் தனித்தனியாக மண்ணெண்ணை வழங்குவதற்கான பகுதிகள் இருந்தன. அவற்றுக்கருகே தண்ணீர் எடுப்பதற்காக கிணறுகள் கட்டப்படடிருந்தன. அவற்றைத்தான் தவறுதலாக மண்ணெண்ணைக் கிணறுகள் என எண்ணியதையும் உணர்ந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.

அப்பா சொன்னார், “எல்லா விடயங்களையும் நன்கு அவதானிக்க வேண்டும். சரியாக ஒரு விடயத்தை அறிந்த பின்புதான் பதில் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையாவது உளறிக்கொட்டி முட்டாள் பட்டம் எடுக்கக் கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் தகுந்தவர்களிடம் கேட்டு சந்தேகத்துக்குத் தெளிவு பெறவேண்டும்.


(இதற்கு முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: