Tuesday, June 17, 2014

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல் -உடுவை எஸ்.தில்லைநடராசா

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல்

வவுனியா கள்ளிகுளம் பொன்.முத்தையா அவர்களின் சிலை திறப்புவிழாவில் பொது சேவை ஆணைகுழு உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராசா ஆற்றிய உரையிலிருந்து ......


(தொகுப்பு: கரவை க.தே.தாசன்)


அமரர் பொன்.முத்தையா வவுனியாவில் பிரதானமாகக் கிடைக்கும் உள்ளூர் விளைபொருட்களையும் ஏனைய வளங்களையும் கூட்டுறவு அமைப்புகளினூடாக பயன் படுத்தி விவசாயிகளினதும் விலங்குவேளாண்மை செய்வோரினதும் பொருளாதாரத்தையும் வாழ்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டுமென பல ஆலோசனைகளை காலத்துக்குக்காலம் முன் வைத்தார். அவர் வழங்கிய பெறுமதியான ஆலோசனைகளால் தனிப்பட்டவர்கள் மாத்திரமன்றி பொது நிறுவனங்களும் பெருமளவில் பயனடைந்தன. சாதரணமாக வாழ்பவர்கள் மரணித்த பின் அவரது குடும்பத்தினரால் கூட நினைவு கூரப்படுவது குறைந்து வரும் இந்நாட்களில் திரு.முத்தையா காலமான பின் அவரது பெயரால் “முத்தையா மண்டபம் “அமைக்கப் பெற்று நல்ல நிகழ்வுகள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. அவர் இறந்து இருபத்தெட்டு வருடங்களின் பின் அவர் பிரதானமாக வழிகாட்டிய கூட்டுறவுச் சங்க வளவில் அவருக்கு சிலை நிறுவி, அந்த நிகழ்வுக்கு அவரது மனைவி மக்கள் உறவினர் ஊரவரை அழைத்தது மாத்திரமன்றி, வவுனியா மாவட்டத்தில் அவரது காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய மூன்று அரசாங்க அதிபர்களும் சிலை திறப்புவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து, அவரின் முக்கியத்துவத்தையும், அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் உணரக்கூடியதாக உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வசதிகள் மிகக்குறைந்த”கள்ளிகுளம்” என்றழைக் கப்படும்பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவரான திரு. முத்தையா பிரித்தா னிய இராணுவத்தில் யுத்தகாலத்தில் சேவைபுரிந்தவர் என்று அறியமுடிகிறது. அதனால் அவர் பல் வேறு தரத்தினரோடு நெருங்கிப் பழகியதால் பெற்றுக் கொண்ட  அறிவு அனுபவம் ஆகியவற்றோடு வவுனியா மாவட்டத்தைப் பற்றி பூரண விபரங்களையும் அறிந்திருந்த ஒருவராகவும் இருந்திருக்கின்றார். தெய்வ நம்பிக்கை மிக்க ஆன்மீக வாதியாகவும் வாழ்ந்திருக்கின்றார்.
1970 களுக்கு முன் வவுனியா பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தை வழி நடத் தியவர் ..முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்று பெருமைக் குரியவர் அமரர் கள்ளிகுளம் முத்தையா.
1973-74-75  காலகட்டத்தில் வவுனியா  பல நோக்கு கூட்டுறவு  சங்கத்தின் அருகே கடுங் கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது., அந்தக் காணியில் ஒரு நெல் குற்றும் ஆலையும் அமைக்கப்பட்டிருந்தது. .அதற்கு அருகாமையில் ஒரு கோழிப்பண்ணை இருந்தது .வவுனியா மக்கள் தரமான கோழி இறைச்சியையும் முட்டையையும் அங்கே வாங்கக் கூடியாதாக இருந்தது.இந்த நிறுவனங்கள் வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமானவை . இது மட்டுமல்ல நொச்சி மோட்டையில் ஒரு ஆடைத்தொழிலகமும் இருந்தது .அந்தக் கிராம மக்களும் அயலூர் மக்களும் வவுனியா நகருக்கு வராமல் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததுடன் அந்நிறுவனம் பல இளம் பெண்களுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியது.
அப்போதைய   பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வவுனியா நகருக்கு அண்மையிலுள்ள ஓமந்தை தோடம் பழச் செய்கைக்கு உகந்த இட மென அறிந்து பிபிலை என்னுமிடத்திலிருந்து தோடம்பழக்கன்றுகளை வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டும் அன்றையகால சூழ்நிலைகளால் அத் திட்டம் கைவிடப்பட்டது அதே போல வவுனியாவில் பெரும் எண்ணி க்கையான கால் நடைகள் இருப்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் வவுனியா மக்களின் தேவைக்கு மேல் மித மிஞ்சியதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்தி பால் பதனிடும் சாலை ஒன்றை வன்னியில் ஆரம் பித்து”வன்னிஸ்பிரே” என்னும் வர்த்தகப் பெயருடன் பால் மா விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது  அது மட்டுமல்ல ..போத்த லில் அடைக்கபட்ட பால் நிறமூடப்பட்ட வாசனைச் சுவையூட்டப்பெற்ற பால் பட்டர் பாலாடைக்கட்டி தயிர் எல்லாவற்றையும் தரமான பொருட்களாக நியாமான விலையில் கிடைக்க வழி வகுத்து போசாக்குச் சத்துள்ள உணவு வகைகளை விநியோகம் செய்வதோடு பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அண்மையில் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சுமார் இருபத்தையாயிரம் பால் தரும் பசுக்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து மாதம் தோறும் சுமார் இரண்டு லட்சம் லீட்டர் பால் பெறப்படுவதாகவும் அறிய முடிந்தது. மேலும்  இரண்டாயிரம் எருமைமாடுகள்,  பத்தாயிரம் ஆடுகள் வளர்க்கப்பட்டு அவற்றின் பயன்களையும் இங்குள்ளவர்கள் பெறுவதாக அறிகின்றேன். வவுனியாவில் வளர்க்கப்படும் கோழிகள் மாதம் தோறும் சாராசரி இரண்டு லட்சம் முட்டைகள் இடுவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
சாதாரணமாகவே பப்பாசிப்பழமும் வாழைப்பழமும் தாரளமாக வவுனியாவில் உண்டு. மாம்பழம் பலாப்பழம் போன்ற பருவ காலப் பழங்களும் உண்டு. மிகையாகக் கிடைக்கும் காலத்தில் பழங்களைப் பதனிட்டு ஜாம் பழரசம் வற்றல் போன்றவற்றை போத்தல், தகரத்தில் அடைத்தும் பிற இடங்களுக்கு அனுப்பலாம்.. சாதாரணமாக எங்கள் சந்தைகளில் தேங்கிக்கிடக்கும் கறிவேப் பிலைக்கும் முருங்கையிலைக்கும் நம்மவர் புலம் சிதறிய நாடுகளில் நல்ல கிராக்கி.
60 களில்       70  களில்    வவுனியா நகரத்திலுள்ள ஹோட்டல்களுக்கு சென்றால்  வேறு ஹோட்டல்களில் காணாத தனித்தன்மையைக் காணக்கூடியதாக இருக்கும். வவுனியாகுளம், நகரோடு இணைந்திருக்கும் வைரவபுளியங்குளம் உட்பட சிறு சிறு குளங்களில் உள்ள  தாமரையிலைகள் சாபாட்டுக்கடை களுக்கு வரும்.அதனால் உள்ளூரில் சிலருக்கு உழைப்பு  சுழல் மாசு அடைவதில்லை. பயன் படுத்திய இலைகள் பின்னர் மண்ணோடு சேர்ந்து உரமாகிறது. இன்று தாமரையிலைகளுக்குப் பதிலாக பொலிதீன் கடதாசி களில் உணவு பரிமாறல்.அதிகமான செலவு ஒரு புறம்.சூழல் மாசடைவது மறுபுறம்.
 கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் நாள்தோறும் பல புகையிரதங்கள் ஓடிய காலத்தை நினைத்துப்பார்க்க ஆசையாக இருக்கிறது.இப்போது வெகு விரைவில் கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் யாழ்பாணம் வரை செல்லும் என்ற தகவலும் கிடைத்துள்ளது .அந்த நாட்களில் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணம் வரை “வவுனியா கச்சான்”  “வவுனியா கச்சான்”  என கூவி விற்ற வியாபாரிகள் பலரைக் கண்டிருக்கின்றோம் கட்டுப்படியான விலையில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த நட்டுநொருக்குத் தீனி வவுனியா கச்சான்.பெரும்பாலும் வறுத்து சிறு பைகளில் அடைக்கக் பட்டாலும் பல்வேறு வகைகளில் பதனிடப் படுவதையும் காணலாம். கச்சானுடன் . .மிளகாய்த்தூள் சேர்த்தால் உறைப்பாக இருக்கும் சீனிப்பாணியில் போட்டு எடுத்தால் மிகச் சுவையாக இருக்கும்   உப்புத்தூள் இட்டால் உவப்பாக இருக்கும்.இவற்றை இங்குள்ள கூட்டுறவு சங்கம்   கொழும்பில் பொருட் காட்சி ஒன்றில்  விற்பனை செய்தபோது அமோகமான வரவேற்பு கிடைத்தது . சாதாரணமாக கச்சான் பருப்புகளை எடுத்துக் கொண்டு கோதுகளை வீசி எறிந்து விடுவார்கள். இந்தியாவில் கச்சான் கோதுகளை கடின அட்டை தயாரிப்பதற்கு கடதாசி தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதாகவும் வயல்களில் உரமாக போடுவதாகவும் பத்திரிகைகள் மூலம் அறிந்துள்ளேன்
இன்று மின்சாரத்தில் இயக்கும் அரவை இயந்திரங்கள் வருவதற்கு முன்பு நல்ல அம்மி ஆட்டுகல்லு கல்லுரல் வவுனியாவிலிருந்தே பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வவுனியாவிலும் பனைமரங்கள்  உண்டு. இலங்கையில் பொதுவாக ‘சோத்தி ‘என்று தரம் குறைவாகக் கருதி கழித்து விடப்படும் பனைமரங்களில் இருந்து அழகான அலங்காரப் பொருட்கள் செய்வதையும் –அவை வரவேற்பறைகளில் வைக்கபட்டிருப்பதையும் தாய்லாந்தில் பார்த்துள்ளேன். அது மட்டுமல்ல நுங்கை உள்ளுடனாக வைத்து சுசியம் போன்ற ஒருவகைத் தின்பண்டத் தையும் சுவைக்கக்கூடிய வாய்ப்பு அங்கே  கிடைத்தது . எங்கள் பகுதிகளில் கிடைக்கும் வளங்களையெல்லாம் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி சொல்வார் அமரர் முத்தையா. முடியமான போதெல்லாம் தெரிந்த விடயங்களையே திருப்பித் திருப்பிச் செய்யாமல் புதுப்புது வடிவம் புது மாதிரி என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பார்

வவுனியாவில் சாதாரண விவசாயிகளே கடின உழைப்பால் விவசாய மன்னர்களாக பட்டம், பதக்கம்,பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.இன்னொரு விடயம் 80களில் வவுனியாவில் கத்தரிக்காய் அமோக விளைசல் காணப் பட்டது. அதனை பிற இடங்களுக்கு சாக்கில் கட்டிக்கொண்டு செல்லும்போது கணிசமான அளவு கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடைவதை அவதா னித்த “வேலு” என்ற விவசாயி  கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடை வதை தவிர்க்கும் வகையில் புதிய இனம் ஒன்றை அறிமுகம் செய்தார். அது அந்த நாட்களில் “வேலு கத்தரிக்காய்” என் அழைக்கப்பட்டது
வவுனியாவின் வட புறத்தே நெடுங்கேணி பகுதியில் சுத்தமான தரமான தேன்.கிடைக்கும். அதை அளவான போதல்களில் அழகிய லேபல்கள் ஒட்டி சந்தைபடுத்தினால் கணிசமான பணத்தை பெறக்கூடியதாக இருக்கும்
கொழும்பில் சில கடைகளில் வவுனியா அரிசி என்று சொல்லியே விற்பனை செய்வார்கள். ஒரு பிரதான இடத்தில் “ வவுனியா அரிசிக்கடை” என்று பெயர்ப் பலகையே மாட்டப்பட்டிருக்கிறது. வியாபாரத்தை விருத்தி செய்து நெல் அரிசி மட்டுமல்லாது அரிசி மா, அவல் அரிசியையும் அரிசி மாவையும் மூலப்பொருளாகக் கொண்ட உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக அமரர் முத்தையா தெரிவித்த ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளக்கூடியவை கிடைக்கும். விவசாய திணைக்கள  புள்ளி விபரங்களின் பிரகாரம் கால போகத்தில் சுமார்  ஐம்பதி னாயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான  நெல்லும்  சிறு போகத்தில் அதில் அரைவாசியளவு நெல்லும் விளைவதாக அறிய முடிகிறது 
காலபோக மற்றும் சிறு போக காலங்களில் சோளமும் செய்கை பண்ணப் படுகிறது. இன்று சோளத்தை அவித்து விற்பனை செய்வோரைக் காணலாம். அவித்த சோளம் பயணிபோரின் சிற்றுண்டியாக உள்ளது. அது  ஹோட்டல் களில் சூப் லட்டு உட்பட பலவகையான பண்டங்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.வெளி நாடுகளிலிருந்து கவர்சிகரமான பெட்டிகளிலும் பொதிகளிலும் இறக்குமதியாகும் சோளம் தான் கணிசமானோரின் காலை உணவாகவும் உள்ளது. சோளத்தைப் பதனிடல், பொதி செய்தல் ஆகியவற்றோடு விளம்பரம் விநியோகம் ஆகியவற்றையும் சீராகச் செய்வதன் மூலமும் வருமானத்தைப் பெருக்கலாம்
70 கள்   80 களில் உழுந்து செய்கை பண்ணி பெரும் செல்வந்தராக வந்தோ ரும் இருக்கிறார்கள். வவுனியாவில் விளைந்த உழுந்தில் பெருமளவு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நம்மவர் உழுந்தை தோசை இட்லி வடை என்று சாப்பிட இறக்குமதி செய்தவர்கள் அதனை நீரில் ஊற வைத்து முளை விட்டதும் முழுமையாகவே பச்சையாகச் சாப்பிடுவதை சில நாடு களில் பார்த்திருக்கின்றேன். அதில் தான் போஷாக்கு அதிகமாம். தருவிப் போருக்கு தெரிந்த சங்கதிகள் விளைவிப்போருக்கு தெரியாமலிருக்கிறது என திரு முத்தையா சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெடித்த கலவர சமயம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் வெங்காய கொள்வனவு விற்பனை விடயத்தில் பெருந் தொகையை இழந்து எல்லோரும் சோர்ந்து போய் இருக்கையில் வியாபாரம் என்பது எப்போதும் ஒரேமாதிரி இருக்காது . எழுப்பி விழுத்தும்  எதிர்பாராத லாபங்களும் வரும் என்றார்,அமரர் முத்தையா. அது போலவே வவுனியா ஊடாக செல்லும் பாரவூர்திகளில் பொருட்களை இறக்கி ஏற்றும்போது பெற்ற வருமானம் விழுந்த சங்கத்தை எழும்ப வைத்தது.
அமரர்.பொன்.முத்தையா வழங்கிய இன்னொரு சிறந்த ஆலோசனையையும் பதிவு செய்தாக வேண்டும்.  1983 நடுப்பகுதியிலிருந்து உள்நாட்டுப்போர் தொடர் பிரச்சினைகளாகின. ஒரு நாள் மாலை தெற்கிலிருந்து  நூற்றைம்பது பேர் வந்த போது,அவர்களுக்கு  உணவு வழங்க முடியாமல் கச்சேரி உத்தி யோகத்தர் தடுமாறினார்கள். வவுனியா வர்த்தகர்கள் பாண்,ஜாம்,வாழைப்பழம் என்று வாரி வழங்க வந்தவர்கள் வயிறு குளிர்ந்தது ஏனென்றால் அப்போது புனர்வாழ்வு அமைச்சு என் ஒரு நிறுவனம் இருக்கவில்லை.
 பிரச்சினைகள் பெருகிக்கொண்டு போவதை உணர்ந்த வவுனியா அரச அதிபர்.கே.சி.லோகேஸ்வரன், இடம் பெயர்ந்து வருவோர்,போராட்டத்தினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார்.அக்கூட்டத்தில் அரச உத்தியோகத்தர்களோடு பொது மக்கள் சார்பில் அமரர்முத்தையா அவர்களையும் அழைத்திருந்தார். கச்சேரியில் நடை பெற்ற கூட்டத்தில்  அரச உத்தியோகத்தர்களுக்கே முன் மாதிரியாக சில  தீர்மானங்களை எடுக்க வழி காட்டியவர் முத்தையா.

சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வருவோருக்கு முதலில் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றார்.அது சமைத்த உணவு என்று அழைக்கப்பட்டது. தொடர்ந்து சமைத்த உணவு வழங்க முடியாது,ஆகவே உணவுப்பொருட்கள்.சமைப்பதற்கான உபகரணங்கள்  வழங்க வேண்டுமென்று யோசனை சொன்னார். அதுவே பின்னர் உலருணவு சமையல் பாத்திரங்கள் என்ற பெயரைப் பெற்றது. அரச உத்தியோகத்தர் இடம் பெயர்ந்தாலும் சம்பளம் கிடைக்கும். மற்றவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது போலவே இருப்பிடம் அமைக்கவும்  நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப் பட்டது.
1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின் “ஒருங்கிணைந்த புனர்வாழ்வு உதவித்திட்டம்” என்பது நடைமுறைப்படுத்த பட்டபோது, சமைத்த உணவு சமையல் பாத்திரங்கள் மீளக் குடியமர்தல் படி ,  உற்பத்தி முயற்சி நன்கொடை வீடமைப்பு உதவி  என்ற பெயர்கள் COOKED MEALS,COOKING UTENSILS, RESETTLEMENT ALLOWANCE,PRODUCTIVE ENTERPRISE GRANT, HOUSING ASSISTANCE ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நாடெங்கும் பரவலாக அறிமுகமானது.

Wednesday, May 21, 2014

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 04-05-2014 ஞாயிறு மாலை நடைபெற்றது

அண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பலத்தின் படத்துக்கு தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜா மலர்மாலை சூடிய போது
உடுவை.எஸ்.தில்லைநடராஜா தலைமை யுரையாற்றுகையில்
செயலாளர் என்.சரவணபவன் உரையாற்றுகின்றார்
கூடத்தில் கலந்து கொண்டோருடன் முன் வரிசையில் அமரர் தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார்
கலாநிதி ஏ.நவரட்ணராஜா இரங்கலுரை நிகழ்த்துகையில்
 ஆசிரியர் இ.பஞ்சநாதன் இரங்கலுரை நிகழ்த்துகையில்

ஆசிரியர் ஆர்.பொன்னம்பலம் இரங்கலுரை நிகழ்த்துகையில்

ஆசிரியர் இ.பஞ்சநாதன் மற்றும் உடுவை எஸ்.தில்லைநடராஜா அண்மையில் காலமான முன்னாள் அதிபர் அமரர் எஸ்.தில்லையம்பலத்தின் புதல்வர்கள் டாக்டர் பானு . பொறியியலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் உரையாடுகையில்
 உ.அ.மி.கல்லூரி ப.மா.ச (கொழும்பு ) கிளைப் பொருளாளர் எம்.கணபதிப்பிள்ளை நிதியறிக்கை சமர்ப்பிகையில்
 
 உ.அ.மி.கல்லூரி அதிபர்.எஸ்.கிருஷ்ணகுமார் உரையாற்றுகையில்
உ.அமி கல்லூரி ப மா ச தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபாபதி,

கல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் உள்ளக ஒலிபரப்புச் சாதனங்களை அன்பளிப்பு செய்த வைத்தியக் கலாநிதி வி.யோகநாதன் ஆசிரியர்.இ.பஞ்சநாதனால் ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்
 கல்லூரிக்கு தனது சொந்தச்செலவில் துவிச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தை அமைத்து அன்பளிப்பு செய்த BOTSWANA பொறியியலாளர் ஏ.மகேந்திரன் சார்பில் அவரது உறவினர் ஆசிரியர்.ஆர்.பொன்னம்பலத்தால்  ஞாபகார்த்தவிருது வழங்கிக் கௌரவிக்கப்படுகையில்
 
 உ.அமி கல்லூரியில் கல்வி பயின்ற வண.கலாநிதி டி.எஸ்.சொலமன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக நியமனம் பெற்றதைக் கௌரவிக்கும் முகமாக உ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத்தலைவர் உடுவை எஸ்.தில்லைநடராஜாவால் பொன்னாடை போர்து , மாலை சூடி புத்தகப் பரிசில் வழங்கிக் கௌரவிக்க ப்படுகையில்



உ.அமி கல்லூரி ப மா சங்க கொழும்புக் கிளைத் துணைத் தலைவர் ஆர்.முத்துரத்தினானன்தன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்
 பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை விரிவுரையாளர் செ.சுதர்சன் வண.கலாநிதி டி.எஸ்.சொலமனின் சேவைகள் தொடர்பாக உரையாற்றுகையில்
வண.கலாநிதி டி.எஸ்.சொலமன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்
தற்காலிக தலைவர் புதிய ஆட்சிக்குழு தெரிவை நடாத்திய போது
 மீண்டும் புதிய ஆட்சிக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட  உடுவை.எஸ்.தில்லைநடராஜா நன்றி தெரிவித்து  உரையாற்றுகையில்
மீண்டும் புதிய ஆட்சிக் குழுவின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட  என்.சரவணபவன் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில்
கல்லூரி பழைய மாணவர் கே.தவம் இசை விருந்தளிகையில்


Thursday, May 15, 2014

எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம் அவர்கள்....-உடுவை.எஸ் தில்லைநடராஜா


எனது பார்வையில் அமரர் தில்லையம்பலம்  அவர்கள்
-உடுவை.எஸ் தில்லைநடராஜா
அண்மையில் எம்மை விட்டுப்பிரிந்த கல்விப்பெருந்தகை திரு.தில்லையம் பலம் என்ற பெயரைக் கேட்டால்  என்மனத்தில் உடனடியாகத் தோன்றுவது எப்போதும் புன்சிரிப்பு தவழும் அவரது முகம் – எதிலும் எளிமையான சுபாவம் –இதமானதும் மென்மையானதுமான  பேச்சு ....இவற்றின் சொந்தக் காரர் ..அதிபர் திலகம் –ஆசிரியமாமணி – அமரர். சி.தில்லையம்பலம் அவர் களே! . சிறுவயது முதல் நான் படித்த அதே  உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில்தான் அவரும் உயர் வகுப்புகளில் படித்திருக்கிறார்., அப்போது நான் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை.,அவசியமானபோது கூட அவரைப்பற்றி அறியாதிருந்துள்ளேன் .
நேரடியாகவே விடயத்துக்கு வருகின்றேன்.,  1960 ம் ஆண்டு டிசெம்பர்  வரை படிப்பில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்து வகுப்பில் முன்னணியில் திகழ் ந்த எனக்கு 1961 க்குப்பின் விஞ்ஞான பாடங்கள் மூளைக்குள் ஏற மறுத்தன. 1963 டிசம்பர் க.பொ.த. (சா /த ) பரீட்சை முடிவுகள் என்னை ஏமாற்றி விட்டது .அப்போது க.பொ.த. (சா /த ) பரீட்சை  டிசம்பர்- ஆகஸ்ட் என இரண்டு தடவைகள்  நடைபெறும்
பிரதி அதிபர் திரு.றோபேர்ட் நவரத்தினம் என்னை நன்கு புரிந்து கொள்ள- அவரின் அறிவுரையோடு க.பொ.த. (சா /த ) 1964 ஆகஸ்ட் மாத பரீட்சையில்  விஞ்ஞான பாடங்களுக்குப் பதிலாக, கலைப் பாடங்களில் எழுத என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன் .
கல்லூரி அதிபர் திரு.எஸ்.எஸ்.செல்வத்துரை பரீட்சையில் பாடங்களை மாற்றி  எழுத பெற்றோரின் அனுமதியும் தேவை என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் .
பெரும்பாலான பெற்றோர் போல எனது பெற்றோரும், என்னை ஒரு doctor ராக பார்க்க வேணும் என்று கனவு கண்டு கொண்டிருந்த காலத்தில் எனது  பெற்றோரிடம் எப்படி கலைப் பாடங்களை மாற்றி  எழுத அனுமதி பெறுவது? கல்யாணப்பரிசு படம் பார்த்ததால் அம்மாவுக்கு விட்டேன் ஒரு டூப் –“ காலையில் பள்ளிக்கூடம் போவதற்கு முன் ,”அம்மா  maths படிக்க கஷ்டமாக இருக்கு இந்த சோதனைக்கு maths எடுக்காமல் arithmetics எடுக்கப் போறன்” என்றேன்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போனதும் நான் எதிர் பார்த்த தற்கு மாறாக அம்மா முந்திக்கொண்டு ,” தில்லையம்பல மாஸ்ரட்டை படிச்ச பொடியள் எல்லாரும் பாஸாம்- நீயும் அவரட்டைப் போய் படி- .அவர் காசும் வாங்கிறதில்லையாம்...நல்லாக சொல்லிக் குடுக்கிறாராம்”
வீட்டில் இருக்க முடியாத நிலையில் உடுப்பிட்டி சந்திக்கு வந்து கொஞ்ச நேரம் நின்றுகொண்டு யோசித்தேன். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தில்லையம்பலம் மாஸ்டர் வல்வெட்டிப் பக்கமாக இருந்து ஸ்கூட்டரில் வரும் ஆசிரியர் தான். அவரது வீடு இருக்கும் இடமும்  சரியாகத் தெரியாது உடுப்பிட்டி சந்தியிலிருந்து வன்னிச்சி கோவிலடி வரையும் பொடி நடையில் போய் வந்து, இரவு எட்டு மணியளவில்  அம்மாவுக்கு விட்டேன்-இரண்டாவது  டூப் –“ அம்மா தில்லையம்பல மாஸ்டர் வீட்டிலை கதிரை மேசை காணாதாம் .எனக்கு முதல் அங்கை போன பொடியங்களுக்கே இருக்க இடமில்லையாம் “
அம்மா ஒரு மாற்று யோசனையை சொன்னார்:- “இஞ்சை வீட்டிலை இருக் கிறதிலை ஒரு சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வை .சோதினை முடிய திரும்ப எடுத்துக் கொண்டு வரலாம் .”
நான் முணுமுணுத்துக்கொண்டே சிணுங்கினேன்-:”என்னை மேசையையும் கதிரையையும் காவிக்கொண்டு உடுப்பிட்டி சந்தியாலை போக சொல்றீங் களோ ?”
எனக்கு வந்த கோபத்தில் ஒரு ஆயுதத்தை பாவித்தேன்., ஒன்றும்  சாப்பிடா மல் படுத்து விட்டேன்.
அம்மா தனக்குத்தானே சொன்னது எனக்கும் நன்றாக் கேட்டது: –“நாளைக்கு காலமை நான் தான் சின்ன மேசையையும் கதிரையையும் கொண்டு போய் தில்லையம்பல மாஸ்டர் வீட்டை வைக்க வேணும்”
ஒரு பத்து நிமிடத்தால் வீட்டுக்கு முன்னால் இருந்த படலை திறந்து சாத்தும் சத்தம் கேட்டு கண் விழித்துப்பார்த்தேன். நல்ல வேளை நான் பயந்தது போல் அம்மா  மேசையையும் கதிரையையும் காவவில்லை., எங்கேயோ பக்கத்து வீட்டுக்கு போவது போல தெரிந்தது.
சுமார் அரை மணி நேரத்திலை திரும்பி வந்த அம்மா எனக்கு அதிர்ச்சி அளிக் கும் செய்திகளை சொன்னார்.
“ நீ தில்லையம்பல மாஸ்டர் வீட்டை போக இல்லையாம் . நீ வல்வெட்டிப் பக்கமாக எல்லே போனனி ! ? .அது வேறை தில்லையம்பல மாஸ்டர் !. இவர் நவிண்டிலிலை இருக்கிற தில்லையம்பல மாஸ்டர்.!அங்கை வாங்கு மேசை யெல்லாம் இருக்காம் . உடுப்பிட்டியிலை இருந்து கனபேர் போறவங்களாம் . மகேந்திரனும் இண்டைக்கும் போய் வந்தவனாம் .நீயும் நாளுக்கு துடக்கம் போ “
இவ்வளவு தகவலுக்கும் பிறகு நான் வாய் திறக்க முடியுமா ?- தகவலை சொன்னவர் எனது பெரியம்மாவின் மகன்.
எனது தாயார் மட்டுமல்ல- பெண்கள் நாலைந்துபேர் சேர்ந்தால் ஊர் உலக செய்திகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்து விடும்.
அடுத்த நாள் மாலை பெரியம்மாவின் மகனுடன் சேர்ந்து நானும் நவிண்டில் சென்று ஆசிரியர் தில்லையம்பலம் கணித பாடம் படிப்பிக்கும் இடத்துக்கு அண்மையிலுள்ள பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இரண்டு மணி நேரம் ஆறுதலாக இருந்தேன். அரை றாத்தல் ரோஸ்ட் பாண் 15 சதம்., மெல் லிய சூட்டோடை சாப்பிட நல்ல ருசி., சம்பலும் வேண்டாம்- கறியும் வேண்டாம்.
ஒரு கிழமையாக  ரோஸ்ட் பாண் சாபிட்டேனே தவிர- தில்லையம்பல மாஸ் டர் பற்றி, அவரது கற்பிக்கும் ஆற்றல், பற்றி அறிந்து கொள்ள அப்போது முயற்சிக்கவில்லை.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பே எங்கள் பெற்றோர், தில்லையம்பல மாஸ் டர் காசு வாங்காமல் - காலமெல்லாம் பயன் தரும் கணித பாடத்தில் எப்படி அதிக புள்ளிகள் பெற்று சித்தியடைவது என்று மாணவர்கள் தடுமாறியபோது –தம்மை முழுமையாக அர்ப்பணித்து தன்னை நம்பியுள்ள மாணவர்கள் சித்தி யடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காமல் பாடம் சொல்லிக்கொடுத்தார் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
திரு.தில்லையம்பலத்திடம் மாணவனாக நான் படிக்கக் கொடுத்து வைக்க வில்லை. ஒரு கிழமை கூட ரோஸ்ட் பாண் சரியாக சாப்பிடயில்லை. தில்லையம்பல மாஸ்டரின் பெயரை சொல்லி, பேக்கரிக்கு முன்னால் உள்ள மணலில் இருந்து ரோஸ்ட் பாண் சாப்பிடுற  கதை அம்மாவுக்கு போடுத்து.
தில்லையம்பல மாஸ்டரின் பெயரைப் பழுதாக்கக் கூடாது என்று சொல்லி வீட்டில் சிறையில் இருத்தி விட்டா,அம்மா .
70 களுக்கு முந்திய காலத்தில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கற்பித் தல் கடமையாகக் கருதப்பட்டது .பிரத்தியேக கல்வி நிலையங்கள் பெருமள வில் இல்லாத காலம் –காலையிலும் மாலையிலும் தனிப்பட்ட டியூஷன் வகுப்புகள் இல்லாத காலம்.
இவரது சகபாடியும் இணைபிரியாத நண்பருமாகிய  ஒருவர் ஒருமுறை திரு. தில்லையம்பலதைப் பற்றி சொல்லும்போது- பாடசாலை நாட்களிலேயே கணிதப்பாடத்தை சக மாணவர்களுக்கு ஆசிரியர்களைப்போல படிப்பிக்கும் ஆற்றல் உள்ளவராக இருந்ததாகவும் –அதனால் ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் திரு தில்லையம்பலம் மாணவர்களுக்கு ஆசிரியராகக் கடமை யாற்றியதாகவும் தெரிவித்தார்.
ஒருவர் செய்வதைப்போல இன்னொருவர் செய்து காடுவதை  மிமிகிரி என்று சொல்வார்கள். திரு தில்லையம்பலம் பல்கலைகழகத்தில் இருக்கும்போது ஒரு விரிவுரையாளர் வராததால் அவரைப் போல மிமிகிரி செய்யும்போது குறிப்பிட்ட விரிவுரையாளர் வந்து இவர் மீது நடவடிக்கை எடுத்ததால் இவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற நேரிட்டதாகவும் அறிய முடிந்தது.
அதன் பின்னர் நுவரெலியாவில் ஆசிரியராக கடமையாற்றி, ஆசிரிய கலாசாலைக்கு சென்று பயிற்சி பெற்றதையும் அறிய முடிந்தது. ஆசிரிய கலாசாலையிலிருந்து வெளிவரும் பெரும்பாலான ஆசிரியர்களிடம் கற்பிக்கும் ஆற்றலும் மாணவர்களை தம் வழிப் படுத்தி ஒழுக்கமுள்ளவர்களாக்கும் திறமையும் இருப்பினும் இவை திரு தில்லையம்பலத்திடம் சாரசரிக்கு மேற்பட்டதாக இருந்தது.
தன் குடும்ப மேம்பாட்டுக்கன்றி மாணவர் மேம்பாட்டுக்காக –உயர்வுக்காக உழைத்து மாணவரின் மேலான மதிப்பையும் பெற்றோரின் பெரும் அன்பை யும் பெற்றுக்கொண்டார். யார் அவரிடம் சென்று கேட்டாலும் எதுவித வேறு பாடும் காட்டாது பாடம் சொல்லிக் கொடுத்து, பல மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்டக் காரணமான கற்பித்தல் சிகரம் தில்லையம்பலம் என்று சொன் னால் யாரும் இரண்டாவது கருத்து சொல்லமாட்டார்கள்.
கணிதம் கற்க வந்த மாணவர்களை தன் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி மனம் வைத்து கற்பித்தார் .”ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் “ என்று பெரியவர்கள் சொல்வது உண்மை என்பது போல அமரர் தில்லையம்பலத்தின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு உயர்ந்துள் ளார்கள்.
பிற்காலத்தில் 90 களில் பிரச்சினைக்குரிய காலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார்.. ஒருபுறம் போராளிகள் ...இயக்கங்கள் ...மறுபுறம் பாதுகாப்புப்படையினர். இவர்களுக்கிடையில் சம நிலை பேணுதல் என்பது கூரிய கத்தியின் மேல் நடப்பதற்கு ஒப்பானது. சோதனை மிக்க அக்காலத்தில் அதிபர் திரு.தில்லையம்பலத்தின் மனநிலையும் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.
ஒய்வு பெற்றாலும் ஓயாமல் கல்விப்பணி சமூகப்பணி எனதன்னை ஈடுபடுத் திக் கொண்டு பொதுப் பணிகளில் பல சாதனைகளை நிலைநாட்டினார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல ஒரு சம்பவம்:-சில வருடங் களுக்கு முன் கொழும்பில் எனது வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் .திறந்து பார்த்தால்.... திரு தில்லையம்பலமும் அவரது மகனும். அப்போது அவர் அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்., பழைய மாணவர் சங்க தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருக்க வில்லை.,சிறிது நேரம் என்னுடன் கதைத்து விட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மாணிக்கவாசகரின் தொலை பேசி இலக்கத்தை என்னிடம்தான் பெற்று ஏதோ கதைக்கின்றார்., நிதியுதவி என்பதை விளங்கிக்கொள்வதில் எந்தவிதமானதொரு சிரமமும் எனக்கு இருக்கவில்லை., தொலைபேசி உரையாடல் முடிந்ததும் “Thank You Sir “ என்று எனக்கு நன்றி சொன்னார்.,நான் எனது குரலை உயர்த்தினேன் –சற்று தடுமாற்றத்தோடு –“Sir “
அவரது பதில் –“ஓம்  தம்பி ...நீங்க டெலிபோன் நம்பர் தந்ததால் மாணிக்க வாசகருடன் கதைத்தேன் ..Professor துரைராசாவின் பெயரால் ஒரு மாணவனுக்கு புலமைப் பரிசில் கொடுக்க ஒரு லட்சம் ரூபா அனுப்புறாராம்-.ஆசிரியப் பெருந்தகை கேட்டால் ஆயிரமல்ல லட்சக்கணக்கில் உதவி வழங்கத் தக்க நிலையில் வசதியும் விருப்பமும் கொண்ட அவரது மாணவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
 இவர் பழைய மாணவர் சங்கத் தலைவராக இருந்த போது 13-04-2014 உடுப் பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், வெளிநாட்டுக் கிளைகளின் பழைய மாணவர்கள் உட்பட இங்கேயுள்ள பழைய மாணவர் களும் கலந்து கொண்டதுடன், கல்லூரியின் பௌதிக தேவைகளின் ஒரு பகுதியாக கூட்ட மண்டபத்திற்கு உரிய நாற்காலிகள் திரைசீலைகள்- உள்ளக ஒலிபரப்பி- துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம்-புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள்-விளையாட்டு மைதானம் என்பன வழங்கப்பட்டன.
கல்விப் பெருந்தகை அமரர்.திரு.தில்லையம்பலம் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால், கல்லூரித்தேவைகள் யாவும் நிறைவேறியிருக்கும்.
அவரின் ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர் நன்றாக வாழவும், அவரது மாணவர்கள் மேலும்மேலும் உயர்வடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.