Wednesday, September 11, 2013

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...



















உடுப்பிட்டி அ.மி.கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை கனடாவில் 25 வது ஆண்டு விழாவை 09-08-2013,10-08-2013 தினங்களில் கொண்டாடி வெளியிட்ட வானவில் மலரில் வெளியான எனது கட்டுரை இது..எழுத தூண்டி வெளியிட்ட கலாநிதி.த. வசந்தகுமாருக்கு நன்றி

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...

-உடுவை எஸ்.தில்லைநடராசா

கல்லூரி வாழ்க்கை கழிந்து நாற்பது ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் கவலைகள் மனதை வாட்டும் போது- நோய்கள் உடலை வருத்தும்போது பிரச்சினைகள் தலைதூக்கும்போது கல்லூரிக்காலமும் அப்போது சிரித்து மகிழ்ந்த நாட்களும் மாறிமாறி மனதில் தோன்றி சந்தோஷம் தருகிறது., சங்கடங்களை மறக்க வைக்கிறது.

எனது வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ விடயங்கள் மறந்து போய்விட்டது. மறக்காமல் , மறக்க முடியாமல் நினைக்காதபோதிலும் மனமகிழ்ச்சியை- ஒருவித உள்ளக்கிளுகிளுப்பைத் தருவது பள்ளி வாழ்க்கையே ! அடி வாங்கி அழுதாலும் அவமானப்பட்டாலும் இன்று அதை எண்ணிப்பார்க்கிறபோது ஒரு தனிச்சந்தோஷம்.

இப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா மாணவர்களிடமும் சைக்கிள்- சிலரிடம் மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. எனது நாட்களில் பாடசாலைலிருந்து தூரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும். சிலர் பஸ்ஸில் வந்து போவார்கள். ஒரு நாள் வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்குபேச வருகிறார் என்ற கதை பரவ சில ஆசிரியர்கள் முன்னே செல்ல பின்னே மாணவர்படை. சைக்கிள் வைத்திருந்தவர்களுக்கு வசதி. சைக்கிள் பாரில் கரியரில் மாத்திரமன்றி ஹான்டிலிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றனர்.


மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தவுடன் வழமை போல நவுண்டில் சோதிலிங்கம் வீட்டுக்குப் போவதற்காக தனது சைக்கிளைத்தேடி, சைக்கிளைக்காணாமல் அழத்தொடங்கினான். பூட்டப்டபடாமல் இருந்த சைக்கிள்களை மற்றவர்கள் களவாக எடுத்துக்கொண்டு போன கதையும் அதிபருக்கு முறையிடப்பட்டது. நீதி மன்றம் போனவர்கள், நீதி மன்றம் போனசைக்கிள் எல்லாம் அதிபரின் அறைக்கு அருகே வந்து சேர்ந்தது. ஆனால் சோதிலிங்கத்தின் சைக்கிள் வரவே இல்லை. அதிபரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பலர் பதில் சொல்ல முடியாமல் தடுமாற- நீதி மன்றம் சென்று ஒழித்து ஒழித்து பிந்திவந்த மகாலிங்கமும் சிவராசாவும் சொன்ன கதை அதிபரை மாத்திரமல்ல- எல்லோரையும் சிரிக்க வைத்தது. வழமையாக சைக்கிளில் வரும் சோதிலிங்கம் அன்று சைக்கிள் கொண்டு வரவில்லை. சிவராசாவின் சைக்கிள் கரியரிலிருந்து வந்ததை சிவராசா நினைவூட்டிச்சொல்ல சோதிலிங்கம் ஒத்துக்கொள்ள- அதிபரின் தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிவிட்டார்கள்.

பாடசாலை நாட்களில் உல்லாசமாக உலாத்தித்திரிவதென்றால் ஒரு தனிசந்தோஷமல்லவா ? நண்பர்கள் கூடினால் சிலமணி நேரத்துக்குள் சமாளித்து விடலாமென்றால் தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் என சொல்லி புறப்பட்டு- கோவிலுக்குப் போவதற்கு முதல் குளிக்க வேண்டுமென்று சொல்லி பாலத்துக்கு வலது புறமாக இருக்கும் உப்புமாலுக்குச்சென்று கடல்நீராடுவோம். கரையிலிருந்து சற்று தள்ளிப்போனால் கற்கள் எதுவுமில்லாத வெண்ணிற மணலை அடியில் கொண்டதாகவும் ஆழம் குறைவானதாகவும் உள்ள தெளிந்த நீர். வழுக்கும் பாசி- இழுக்கும் சுழி என்ற பயமே இல்லாமல் நேரம் போவது தெரியாமல் கடல் விளையாடிய நாட்கள் ஏராளம் !

சைக்கிள் வசதியும் கிடைத்து ஒரு பகல்பொழுதைச் சமாளிக்க முடியுமென்றால் கீரிமலைக்கேணி எங்களோடுதான். அப்படி தூரம் சென்று வரும் நாட்களில் தாகத்தை தணிக்க வளலாய் என்ற இடத்துக்கும் மயிலிட்டி என்ற இடத்துக்கும் இடையில் தென்னைமரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இளநீருக்குச் சொந்தக்காரர் நாங்கள்.

அந்த நினைப்போடு, ஞானதாசன், பாலசுப்ரமணியம், பரமசாமி ஆகியோரோடு – நானும் வளலாய் கிராமத்தில் தென்னை மரமொன்றில் ஆளுக்கு இரண்டு என்ற வீதத்தில் இளநீர் பிடுங்கிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த கிழவனின் கையில் வைத்திருந்த கத்தியைத் தரும்படி கேட்டோம். கத்தியைத்தர முடியாது இளனியை வெட்டித்தாறன் என எங்களை வீதியோரம் அழைத்துச்சென்று நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மரமொன்றில் கத்தியைத்தீட்ட ஆரம்பித்தான். இடையிடையே நிலத்தில் இருந்த மணலையும் மரத்தில் போட்டு கத்தியை கூராகத்தீட்டிக்கொண்டே,” எங்கை தேங்காய் பிடுங்கினது ?” என விசாரித்தான். பரமன் தான் பதில் சொன்னான்.-‘அந்த மரத்திலை தான் பிடுங்கினது., நேரம் போகுது. கத்தியை கெதியாகத் தாங்கோ- நாங்க வெட்டுறம்’ என்றான். கிழவன் மரத்தில் தீட்டி கூராக்கிய கத்தியை விரல்களால் மெதுவாகத் தடவிக்கொண்டே, “ டேய் என்ரை காணியிக்கிளை களவாக தேங்காய் இண்டைக்கும் பிடுங்கிக்கொண்டு என்னட்டை கத்தி கேக்கிறாங்கள். அண்டைக்கு ஓடினவங்கள்-இண்டைக்கு விட மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே நிலத்திலிருந்து எழும்பினான்.

 “ஓடித்தப்புவம்” என்று சொல்லிய வண்ணம் சைக்கிளில் பாய்ந்து ஏறினான் ஞானதாசன்., கிழவன் அவனைக் குறிபார்த்து ஏறிந்த கத்தி குறி தவறிவிட்டது.

கத்தி விழுந்த இடத்துக்கு விரைவாக ஓடமுடியாத கிழவன் நிலத்திலிருந்த இளனியை ஒவ்வொன்றாக எடுத்து எங்களை நோக்கி ஏறிய நாங்களும்

சைக்கிள்களில் தாவி ஏறினோம். தப்பினோம் பிழைத்தோம் என, கன தூரம் வேகமாக ஓடின சைக்கிள் ஒரு கள்ளுக்கொட்டில் அருகே மெதுவாக தயங்கித்தயங்கி நின்றது. அப்போது தான் ஞானதாசன் சொன்னான்:-‘ இப்ப தான் நினைவுக்கு வருகுது- கொஞ்ச நாளைக்கு முதல் வேறை சில பொடியளோடை வந்து அந்தக் காணியுக்கிளை இளனி பிடுங்கினனாங்கள்., கிழவன் கலைச்சுக்கொண்டு ஓடி வர நாங்கள் ஓடித்தப்பியிட்டம்”.

 ‘தப்பியிட்டம் எண்டு சொல்ல முடியாது. அங்கை வாற சைக்கிள் கரியரிலை கிழவன் கத்தியோடை வாறமாதிரித் தெரியுது’ என்று சைக்கிள் வந்த திசையைக் காட்டினான், பாலன். இரண்டு பேர் சைக்கிளில் வருவது தெரிந்தது.

அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக கொட்டில் பின்புறத்தில் சைக்கிள்களைச்சாத்திவிட்டு உள்ளே ஒழித்துக் கொண்டோம்., கொட்டிலுக்கு உள்ளே போனதால் ஒரு போத்தல் நாலுபேருக்குப் போதாது தான். ஆனாலும் அதுக்கு மேலை போக விரும்பவில்லை.

அன்று இளனி விடயம் சரிவராமல் போனதால் தாகத்தைத் தீர்த்தது அந்தக்கொட்டில். பிறகு இளனி பிடுங்கினதாகவும் நினைவில்லை., கொட்டிலுக்குள்ளை ஒழித்ததாகவும் நினைவில்லை.

கையிலை பையிலை காசு இருந்தால் நம்பக்கூடிய மாதிரி யாராவது ஒரு ஆசிரியரின் பெயரையும் இரவு பாடசாலையில் தங்க வேண்டும் என்று ஒரு கதையையும் அவிட்டு விடுவம். சைக்கிள் வண்டிகள் ஒழுங்கைகள் வழியாக மொட்டைப் புளியடியில் ஒன்றாகச்சந்தித்து , கீரிமலைக்குளிப்பு- யாழ்பாணத்தில் கொத்துரொட்டி-ஏதாவது ஒரு தியேட்டரில் செக்கன்ட் ஷோ. விடிவதற்கு முன் உடுப்பிட்டிச்சந்திக்கு வந்து விடும் சைக்கிள்.

ஒரு நாள் காலையில் நாலைந்து சைக்கிள்- நாங்கள் ஏழு எட்டுப்பேர்- ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று கொடிகாமம் சென்று விட்டோம். மத்தியானம் வயிறு கடிக்க ஒவ்வொருவரும் ஆளையாள் பார்த்தோம். நம்பிக்கையில்லாமல் ஒவ்வொருவரின் பொக்கற்றுகளையும் கடுமையாகச்சோதித்து, ஒருசதம் இரண்டு சதமாக எடுத்த பணத்தின் மொத்தப் பெறுமதி பதினைந்து சதம். நீண்ட நேரம் சந்தையில் தேங்காய் விற்கும் கிழவியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொடிகாமம் சந்தையில் பதினேழு சதம் சொன்ன தேங்காயை இரண்டு சதம் விலை குறைத்து வாங்கி அதைச்சிதறு காயாக அடித்து ஏழு எட்டுப்பேரும் ஆளுக்கு இரண்டொரு தேங்காய்ச்சொட்டு- அது தான் அன்றைய மத்தியான சாப்பாடு.

காய்ந்த வயிற்றோடு சோர்ந்து போய் சைக்கிள் ஓடி வர இரவு எட்டு மணியாகி விட்டாலும் உடுப்பிட்டி சங்கக்கடையைக் கண்டவுடன் ஒரு சந்தோஷம். விசிலடித்து சத்தமாக கத்திக்கொண்டு வர எதிரில் வந்த ஒரு கிழவி கேட்டாள்-“ ஏன்ரா உங்களை பேய் பிசாசு ஒண்டும் காண இல்லையே?”

நவம் சொன்னான்:-“ இல்லைஆச்சி பேய் பிசாசுகள் கண்டது தான். சயிட் எடுத்துக்கொண்டு வாறம்”

இவை எனது கதைகள்- உங்களின் கதைகளையும் கேட்க ஆவலாக உள்ளேன்.


Monday, September 2, 2013

உறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத்தில் வெளியானது

உறவாடுதல் நல்லது...

உடுவை எஸ்.தில்லைநடராசா








சுழலும் உலகில் சுற்றிகொண்டிருக்கிறோம்; எம்மைச்சுற்றி சில உறவினர்கள், நண்பர்கள்.நம்மில் பலர் அவர்களுடன் உறவுகளை தொடர்புகளை பேணிக்கொள்வது குறைவாகத்தான் உள்ளது.ஏதாவது தேவை என்றால் இல்லாத உறவுகளையோ அல்லது தூரத்துச்சொந்தங்களையோ கொண்டாடுவதும் ஒன்றுமே தேவைப்படாதபோது ஒதுங்கிப் போவதும் வழக்கம்.

அரச ஊழியர்கள் பொதுவாக பொதுமக்களுடன் நல்லுறவை உருவாக்கி, வளர்த்து நிலையானதாக்கிக் கொண்டால் கடமைகளைச் சிறப்பாகச் செய்யலாமென்பதுடன், சேவையில் நீடிக்கஉதவியாகவும் அமையும். தனிய அது ஒரு காரணம் மட்டுமல்ல; ஆனாலும் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

ஒருவர் என்னைப்பார்ப்பது போல நான் உணர்ந்தால் மெல்லியதாகச்சிரிப்பேன். அவரும் மெதுவாகச் சிரித்தால் காலப்போக்கில் அது கதை பேசி கருத்துக்களை பரிமாறும் அளவுக்கு வளர்ந்துவிடும். அந்த நட்புறவு ஆபத்துவேளைகளில் உடனிருந்து உதவும் அளவுக்கு உயர்ந்ததுமுண்டு.

1970 களில் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றிய திருப்பரங்கிரி எனது நெருங்கிய நண்பரானார். 1980 களில் கொழும்பில் அவரைக் கண்டபோது அவர் என்னை ஒரு நாளும் காணாததுபோல நடந்துகொண்டபோது, ‘என்ன திருப்பரங்கிரி என்னோடு கோபமா ?’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, தான் திருப்பரங்கிரியின் சகோதரன் அருணகிரி எனவும் தாங்கள் இரட்டையர்கள் (Twins )என்றார்.

சில நாட்களுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் அருணகிரி என்னை நோக்கியபோது,’ஹலோ அருணகிரி’ என்றதும், தான் திருப்பரங்கிரி என்று சொல்லி வவுனியா நினைவுகளை மீட்டுக்கொண்டார். திருப்பரங்கிரி, அருணகிரி இரட்டையர் என்னைச்சற்று தடுமாற வைத்தாலும் இரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.

இது போல- வீரகேசரி புலோலி நிருபர் தில்லைநாதன் எழுபதுகளில் எனது நண்பரானார். எண்பதுகளில் மன்னாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது செய்தியாளர் தில்லைநாதன் செய்திகள் சேகரித்துக்கொண்திருந்தாரேயொழிய என்னைத் தெரிந்தது போலக்காட்டிக்கொள்ளவில்லை. ‘தில்லைநாதா நான் தில்லைநடரஜா’ என்றதும் சிரித்துக்கொண்டே, தான் தில்லைநாதனின் அண்ணா தர்மகுலசிங்கம்-தினபதி நிருபர் என்றார். தில்லைநாதனும் தர்மகுலசிங்கமும் இரட்டையர்கள். ஒருவர் யாழ் வீரகேசரி நிருபர்; மற்றவர் மன்னார் தினபதி நிருபர். ஒருவரின் நட்புறவால் மற்றவர் நட்புறவு தானாக வளர்ந்தது.

1971 இல் பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுநராக நான் கடமையாற்றினேன். எனது சிரேஷ்ட எழுதுனரக புஹாரி..சில நேரங்களில் காரணமில்லாமல் எரிந்து விழுவார். நான் பொருட்படுத்துவதேயில்லை. 1972 கிளாஸ் ரூ பரீட்சை முடிவுகள் வெளியானதும் நிலைமை மாறி புஹாரி எனக்குக்கீழ் வேலை செய்ய வேண்டியவரானார். நான் வேறுபாடு காட்டாவிட்டாலும் அவர் மனம் குறுகுறுத்ததை உணரமுடிந்தது. பின்னர், 1979 இல் நிர்வாகசேவை பதவி உயர்வுடன் மட்டக்களப்புக்கு கூட்டுறவு உதவி ஆணையாளராக சென்றபோது என்னை மனதார வாழ்த்தி வரவேற்ற காதர், புஹாரியின் அண்ணன் என தன்னை அறிமுகப்படுத்தி வேண்டிய உதவிகளை செய்தார்.

1975 இல் வவுனியாவில் எழுதுவினைஞனான என்னை சனிக்கிழமை வேலைக்குச் செல்ல மறுத்ததற்காக எனது மேலதிகாரியாக இருந்தவர்  என்னை கொழும்புக்கு இடமாற்றி விட்டார். சிரித்துக்கொண்டே நன்றி சொல்லி விட்டு வந்தேன். இன்று அந்த மேலதிகாரியும் நானும் ஒன்றாக ஒரே தரத்தில் ஒரே வேதனத்தில் வேலை செய்கின்றோம்.அவர் மட்டுமல்ல- முன்னர் எனது மேலதிகாரிகளாக இருந்த இன்னும் இருவர் என்னோடு வேலை செய்கின்றார்கள். எல்லோரும் சமதரத்தினராக கடமையாற்றுகின்றோம்.

1983 இல் வவுனியா கூட்டுறவு அலுவலகத்தில் திருமதி சீலன் எனது தட்டெழுத்தாளர். பின் அவசர புனர்வாழ்வு புனரமைப்பு திட்ட அலுவலகம் சென்றபோது பிரதம எழுதுனராக திரு. சீலன். 1998 இல் கலாசாரபணிப்பாளராக நியமனம் பெற்றபோது கலாசார உத்தியோகத்தராக சீலனின் தங்கை திருமதி பியசீலி தேவேந்திரன். 1999 இல் கல்வி அமைச்சு மேலதிக செயலாளாரானாபோது வவுனியா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக பியசீலியின் கணவன் தேவேந்திரன். நாலு வெவ்வேறு அலுவலகங்களில் அண்ணா- தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததும் பின்னர் அவர்களின் வாழ்க்கைத்துணையாக இணைந்த உறவுகள் என நான்கு பேருடன் கடமையாற்றினேன்.

இன்னும் சொல்லப்போனால் 1967 இல் களுத்துறை பொலீஸ் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிட்டேன். 2010 இல் அரச விமானப்படை பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுவதற்கிடையில் திருகோணமலை கடற்படைத்தளம் உட்பட பல்வேறு பயிற்சி முகாம்களையும் தளங்களையும் பார்வையிட்டுளேன். எல்லாம் உறவாடியதால் கிடைத்தவை. ஓய்வு நிலையிலும் இன்றும் கடமைகளுக்கு குறைவில்லை.

(வீரகேசரி பத்திரிகை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் ” சமகாலம்” சஞ்சிகையில் (2013 ஆகஸ்ட் 01-15) இதழில் கடைசிப் பக்கம் ஒதுக்கீடு செய்து தந்த ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் ஆகியோருக்கு நன்றி)